search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானங்கள் மோதல்"

    அமெரிக்காவில் நடுவானில் இரு விமானங்கள் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.
    ஜூனோ:

    கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவர் நகரில் இருந்து, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் வரை ‘ராயல் பிரின்சஸ்’ என்கிற சொகுசு கப்பல் சுற்றுலா பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, ‘ராயல் பிரின்சஸ்’ சொகுசு கப்பல் கடந்த சனிக்கிழமை வான்கூவரில் இருந்து புறப்பட்டு சென்றது.

    இந்த கப்பல் நேற்று முன்தினம் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான கெட்சிகன் நகரை வந்தடைந்தது. அங்கு தரையிலும், கடலிலும் தரையிறங்கும் வசதி கொண்ட சிறிய ரக கடல் விமானங்கள் மிகவும் பிரபலமானவை.

    இந்த வகை விமானங்கள் மூலம், சுற்றுலா பயணிகளை அருகிலுள்ள சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. அதன்படி ‘ராயல் பிரின்சஸ்’ சொகுசு கப்பலில் வந்த சுற்றுலா பயணிகள் 2 கடல் விமானங்களில் அழைத்து செல்லப்பட்டனர்.

    இதில் ஒரு விமானத்தில் 11 சுற்றுலா பயணிகளும், மற்றொரு விமானத்தில் 5 சுற்றுலா பயணிகளும் இருந்தனர். இரு விமானங்களும் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்றுவிட்டு, கெட்சிகன் நகருக்கு திரும்பி கொண்டிருந்தன. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் நடுவானில் இருவிமானங்களும் மோதின. இந்த கோரவிபத்தில் 11 பேருடன் சென்று கொண்டிருந்த முதல் விமானத்தில் ஒருவர் உயிர் இழந்தார். மற்ற 10 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    அதே போல் மற்றொரு விமானத்தில் பயணம் செய்த 5 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

    படுகாயம் அடைந்த 10 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். மாயமான 2 பேரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    விபத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. 
    ×